Saturday, January 31, 2009

சீஸ் சாக்லேட் ப்ரோவ்னிஸ்

கடந்த சீன புத்தாண்டு விடுமுறையின் போது நான் மிகவும் ரசித்து செய்த பலகாரமிது. நான் ரசித்து செய்ததால் மிகவும் ருசியாகவும் கூட வந்தது. :)

தேவையான பொருள்கள் :

கலவை 1

150 கிராம் சமையல் சாக்லேட்
120 கிராம் வெண்ணெய் (பட்டர்)
60 கிராம் மைதா மாவு (கேக் மாவும் உபயோகபடுத்தலாம்)
1 மேசைக்கரண்டி சக்கரை
1 முட்டை
1 மேசைக்கரண்டி பேக்கிங் பவுடர்
1 தேக்கரண்டி வெனிலா எசென்ஸ்

கலவை 2

250 கிராம் க்ரீம் சீஸ்
1 முட்டை
50 கிராம் சக்கரை

செய்முறை :

1. சாக்லேட் மற்றும் பட்டர் ஆகியவற்றை கரைத்து கொள்ளவும்.
2. பின், இதனுடன் கலவை 1 இல் உள்ள மற்ற அனைத்துப் பொருள்களையும்
ஒன்றாக கலக்கவும்.
3. இதனை கேக் தட்டில் வைத்து 15 நிமிடம் வேகவைக்கவும்.
4. பின்னர் கலவை 2 இல் உள்ள அனைத்து பொருள்களையும் ஒன்றாக கலந்து
வேகவைத்துள்ள சாக்லேட் கலவையின் மேல் ஊற்ற வேண்டும்.
5. 30 நிமிடங்களுக்கு நன்றாக வெந்த பின் ஐஸ் பெட்டியில் வைத்து பிறகு
பரிமாறவும்.

(பின் குறிப்பு : அவிக்கும் முறையில் வேகவிடவும்)

Friday, January 16, 2009

காளான் சூப்

காளான் சூப்...ஆஹா..என்ன சுவை..!


தேவையான பொருள்கள்:
காயவைத்த பொத்தான் காளான்கள் - 450 கிராம்
எலுமிச்சை ஜூஸ் - 1 மேசைக்கரண்டி
உப்பில்லாத பட்டர் - 1 மேசைக்கரண்டி
சிறிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
Thyme - 1 தேக்கரண்டி
Bay இலை - 1/2
உப்பு - 1 தேக்கரண்டி
அரைத்த மிளகு - 1/2 தேக்கரண்டி
Heavy க்ரீம் - 2 கப்
சிக்கன் ஸ்டாக் - 1 1/2 கப்
1 தேக்கரண்டி சோள மாவை ௧ மேசைக்கரண்டி நீரில் கரைக்கவும்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி

செய்முறை :
1. காளானையும் எலுமிச்சை சூசையும் ஒன்றாக கலந்து மிக்ஸ்யில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.
2. மிதமான சூட்டில் வாணலியை வைத்து, பாட்டைக் கரைக்கவும். பின் வெங்காயம், Bay மற்றும் Thyme இலைகள், அரைத்த காளான் ஆகியவற்றைப் போட்டு 10 - 15 நிமிடங்களுக்கு வதக்கவும். (காளானிலிருந்து வெளியாகும் ஒருவகையான திரவம் காணாமல் போகும்வரை வதக்கவும்)
3. பின், அரைத்த மிளகு, உப்பு, க்ரீம் மற்றும் சிக்கன் ஸ்டாக் ஆகியவற்றைப் போட்டு 20 நிமிடங்களுக்குக் கொதிக்க வைக்கவும். (மிதமான தீயில்)
4. 20 நிமிடங்களுக்குப் பிறகு கரைத்த சோள மாவைப் போட்டு மேலும் 10 நிமிடங்களுக்குக் கிண்டவும்.
5. கடைசியாக நறுக்கிய கொத்தமல்லியைப் போட்டு இறக்கலாம்.
பின்குறிப்பு - Thyme மற்றும் Bay இலைகள், க்ரீம், சிக்கன் ஸ்டாக் ஆகியவை பெரிய அங்காடிகளில் மட்டுமே கிடைக்ககூடியவை. இந்த சமையல் குறிப்பில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் அதிகப்படியான ஆங்கில வார்த்தைகளை சேர்க்கும்படியாகிவிட்டது. மன்னிக்கவும்.

மீன் கட்லட்

எனக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளில் இதுவும் ஒன்று. ரசம் சாதத்துக்குக் கூட இந்த மீன் கட்லட் அருமையாக இருக்கும். செய்து பாருங்களேன்.

தேவையான பொருள்கள் :
மீன் - 1-4 கிலோ (வஞ்சரம் நன்று, முள்ளை நீக்கிக்கொள்ளவும்)
உருளைக்கிழங்கு - 1 (வேகவைத்து தோல் உரித்து மசிய வைத்துக்கொள்ளவும்)
பச்சை மிளகாய் - 3-5 (பொடியாக அரிந்து கொள்ளவும்)
வெங்காயம் - 1-2 (பொடியாக அரிந்து கொள்ளவும்)
கொத்தமல்லி - தேவையான அளவு (பொடியாக அரிந்து கொள்ளவும்)
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
முட்டையின் வெள்ளைக் கரு - 2
ரொட்டித் தூள் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
1. மீனை 3-4 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு உப்பு, அரிந்த மிளகாய், வெங்காயம், மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, சீரகத் தூள், கரம் மசாலா தூள் மற்றும் வேகவைத்த மீன் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும்.
3. இதன் பதம் பூரிக்கு மாவு பினையும் அளவுக்கு இருக்க வேண்டும். பின் சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ளவும்.
4. இப்போது ஒவ்வொரு உருண்டைகளாக முட்டையின் வெள்ளைக் கருவில் நனைத்து பின் ரொட்டித் தூளில் போட்டு உருட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

Tuesday, January 13, 2009

ஆட்டிறைச்சி மசாலா

தேவையான பொருள்கள் :-

எலும்பில்லாத ஆட்டிறைச்சி - 900 gm
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
தக்காளி சாறு - 1 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
நறுக்கிய பச்சை மிளகாய் - 2 அல்லது 3
சீரகம் - 1 தேக்கரண்டி
பட்டை - 1
மிளகு - 6 அல்லது 7
கிராம்பு - 7 அல்லது 8
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மல்லித் தூள் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சமையல் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை - கொஞ்சம் நறுக்கியது (அலங்கரிக்க)

செய்முறை :-

1. அடுப்பில் வாணலியை சூடாக்கி எண்ணெய் ஊற்றவும்.
2. எண்ணெய் சூடாகியதும் சீரகத்தைப் போடவும். சீரகத்தின் வெடிப்பு சத்தம் கேட்க ஆரம்பித்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
3. வெங்காயம் பொன்னிறமாகிய பின் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
4. 2-3 நிமிடங்கள் கழிந்த பின் இறைச்சியை அதனுடன் சேர்க்கவும். 3-4 நிமிடங்களுக்குப் பிறகு உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் ஆகியவற்றை இறைச்சியில் சேர்க்கவும்.
5. இறைச்சியின் வர்ணம் பொன்னிறமாக மாற ஆரம்பித்த பிறகு தக்காளி சாறு, பட்டை, கிராம்பு மற்றும் மிளகு சேர்க்கவும். இதனை 2-3 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடவும்.
6. பிறகு வாணலியில் இறைச்சியின் அளவு உள்ளவரை நீர் ஊற்றி 30-35 நிமிடங்களுக்கு வேகவிடவும். அடிபிடிக்காமல் இருக்க கொஞ்சம் நீர் இடையில் சேர்த்துக்கொள்ளலாம்.
7. கடைசியாக கொத்தமல்லி இறைச்சியின் மேல் தூவி அலங்கரிக்கவும்.

Friday, January 9, 2009

அடுக்கு பலகாரம் (Kuih Lapis)

இது இனிப்பு வகை பலகாரம். இதற்குத் தேவையான பொருள்கள் கீழ்வருமாறு,

1 1/2 கப் மைதா மாவு
1/4 கப் அரிசி மாவு
1/4 கப் சோள மாவு
1/2 கப் சக்கரை
3 கப் தேங்காய் பால்
1 தேக்கரண்டி உப்பு
சிவப்பு வர்ணம் (உணவுக்காக பயன்படுத்துவது)
ரோஸ் எசன்ஸ் (தேவையானால்)

செய்முறை

1. இது வேக வைக்கும் முறையில் செய்யக்கூடிய பலகாராம். ஆகையால் வேக வைக்கக்கூடிய தட்டில் கொஞ்சம் மார்ஜெரின் அல்லது எண்ணெய் பூசி அடுப்பில் வைக்கவும்.
2. பிறகு, சிவப்பு வர்ணம், ரோஸ் எசன்ஸ் தவிர எல்லா பொருள்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
3. கலவையை 2 ஆக பிரித்து கொள்ளவும்.
4. பிரித்து வைத்துள்ள ஒரு கலவையில் ரோஸ் எசென்ஸ் உம் சிவப்பு வர்ணத்தையும் கலந்து கொள்ளவும். இன்னொரு கலவை வெள்ளையாகவே இருக்கட்டும்.
5. இப்பொழுது வெள்ளையான கலவையில் இருந்து 2 தோசைக்கரண்டி அளவு எடுத்து சூடாகியுள்ள தட்டில் ஊற்றவும். இதனை 6 முதல் 8 நிமிடங்களுக்கு விட்டுவிடவும். பிறகு இதே அளவு போல் சிவப்பு வர்ண கலவையை ஊற்றி வேகவிடவும். மீதமுள்ள கலவையையும் இதே போல் மாற்றி மாற்றி செய்யவும்.

பின்குறிப்பு :- எல்லா அளவைக்கும் ஒரே அளவான கப் பயன்படுத்தவும்.

மேகி கோரேங் (Fried Maggie)

மலேசியாவின் புகழ்ப்பெற்ற உணவு வகைகளில் இதுவும் ஒன்று. அநேகமாய் அசைவமாய் சமைக்கப்பட்டாலும் நம் விருப்பத்திற்கேற்ப சைவமாகவும் சமைக்கலாம். மிகவும் சுலபமான சமையல் குறிப்பு இது. எப்பொழுதுமே அவித்து மட்டும் சாப்பிட்டு அலுத்தவர்கள் புது விதமாய் சமைத்து உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பரிமாறி மகிழுங்களேன் ;-)

தேவையானவை
2 பேக்கட் மேகி மீ அல்லது இன்ஸ்டண்ட் நூடல்ஸ் (கறி சுவை)
1 வெங்காயம் (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)
1 நறுக்கிய தக்காளி
பூண்டு விழுது
2 சிவப்பு மிளகாய் (நறுக்கிக் கொள்ளவும்)
கடுகுக்கீரை, முட்டைகோஸ், பட்டன் காளான் மற்றும் கேரட் (சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்)
சமையல் எண்ணெய் (தேவைக்கேற்ப)
பொறித்த Taufu (முட்டை)
1 மேஜைக்கரண்டி காய்ந்த மிளகாய்த் தூள்
சோயா சாஸ்
1 தேக்கரண்டி மிளகுத்தூள்
1 1/2 பேக்கட் மேகி கறி சீசனிங் பவுடர்

செய்முறை
1. மேகி நூடல்ஸை அவித்து (1 நிமிடம்) வடிக்கட்டிக் கொள்ளவும்
(மேகி அவிக்க பயன்படுத்திய நீரை பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்)
2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு விழுதையும் நறுக்கிய வெங்காயத்தையும் பொன்னிறமாக வதக்கவும்.
3. 1 1/2 பேக்கட் மேகி சீசனிங் பவுடர், மிளகாய்த்தூள், சிவப்பு மிளகாய், நறுக்கிய தக்காளி, கடுகுக்கீரை, முட்டைகோஸ், பட்டன் காளான் மற்றும் கேரட்டையும் சேர்த்து வதக்கவும்.
4. பிறகு, மேகி அவித்த வடிக்கட்டிய நீரை தேவையான அளவு சேர்த்து வேக வைக்கவும். (1 நிமிடம்)
5. கடைசியாக அவித்து வைத்திருக்கும் மேகி நூடல்ஸைக் வதக்கிய கலவையில் கொட்டி சோயா சாஸ் சேர்த்துக் கிளரவும்.
6. பொறித்த Taufu அல்லது முட்டையை இதனுடன் சேர்த்து சூடாக பரிமாறலாம்

பின் குறிப்பு : முட்டையின் வாடையை போக்க நாம் மிளகுத்துளை பயன்படுத்துவது வழக்கம். அப்படியும் போகவில்லையெனில் சிறிது புளிநீரை முட்டையில் சேர்த்து அடித்து பொரிக்கலாம்.

Thursday, January 8, 2009

கார இறால் (ஊடாங் சம்பால்)

அடடா...பார்க்கும்போதே உமிழ்நீர் ஊர்கிறதே. இதை எப்படி செய்வது என யோசிக்கிறீர்களா? கவலை வேண்டாம்...இதோ என் கைமணம் உங்களுக்காக...:)

தேவையானவை :

இறால் (prawns) - 500 gm
சின்ன வெங்காயம் - 10
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
தக்காளி - பாதி
புளி நீர் - சிறிது அல்லது தேவையான அளவு
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்த் தூள் - 3 அல்லது 4 மேசைக்கரண்டி (காரத்துக்கு ஏற்ப)
உப்பு - தேவையான அளவு
சக்கரை - தேவையான அளவு

செய்முறை :

1. இறாலை சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
2. வெங்காயம், இஞ்சி பூண்டு விழுதை வாணலியில் போட்டு வதக்கவும்.
3. பின், தக்காளி, சீரகத் தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை வதக்கிய பின் கொஞ்சம் நீர் ஊற்றி கொதிக்க விடவும்.
4. உப்பும் 1/2 தேக்கரண்டி சக்கரையும் சேர்த்துக்கொள்ளவும்.
5. இப்பொழுது இறாலைப் போடவும்.
6. கடைசியாக புளி நீர், தேவைப்பட்டால் கொத்தமல்லி போட்டு இறக்கலாம்.

பின் குறிப்பு :- அதிக சுவைக்கு தேங்காய்ப்பாலையும் சேர்த்துக்கொள்ளலாம்.

நளபாகம்   © 2008-2009. Template Recipes by Emporium Digital

TOP