Thursday, March 27, 2008

நாசி லெமாக் (Nasi Lemak)












தேவையான பொருட்கள்

தேங்காய்ப்பால் சாதம்

3 கப் அரிசி (பஸ்மதி)
3 1/2 கப் தேங்காய்ப்பால்
1/2 கப் தண்ணீர்
3 சிறிய அளவில் கீறிய இஞ்சி
3 பாண்டான் (ரம்பை) இலை (சுத்தம் செய்யப்பட்டு முடிச்சிட்டுக் கொள்ளவும்)
1/4 தேக்கரண்டி உப்பு


சம்பால்
200 கிராம் நெத்திலி (இறால் அல்லது கோழி பயன்படுத்தலாம்)
3 வெங்காயம் (பெரியது)
2 பல் பூண்டு
4 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
2 பெரிய தக்காளி (சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்)
சிறிதளவு புளியைக் கரைத்துக் கொள்ளவும்
அரைத்த காய்ந்த மிளகாய் விழுது

இன்ன பிற
வறுத்த (அ) பொறித்த கடலை
அவித்த முட்டை
வெள்ளரிக்காய்

செய்முறை

அரிசியை சுத்தமாக கழுவியப் பின் தேங்காய்ப்பால், தண்ணீர், பாண்டான் இலை, உப்பு மற்றும் கீறி வைத்துள்ள இஞ்சியை சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். அரிசி வெந்ததும் கிளரி விடவும். இப்பொழுது தேங்காய்ப்பால் சாதம் தயார்.

இனி சம்பால் செய்யும் விதத்தைத் பார்க்கலாம்

ஏற்கனவே ஆய்ந்து வைத்துள்ள நெத்திலியை சுத்தமாக நீரில் கழுவி வடிக்கட்டி மிக்ஸியிலோ அல்லது இடிக்கல்லிலோ இடித்துக் கொள்ளவும். நெத்திலியை முழுதாக சாப்பிட விரும்பியவர்கள் இப்படி செய்ய வேண்டியதில்லை.

இனி வாணலியில் எண்ணெய் விட்டு நெத்திலியை பொன்னிறமாக பொரித்துக் எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து சுத்தம் செய்த வாணலியில் 2 அல்லது 3 மேசைக்கரண்டி எண்ணைய் விட்டு நறுக்கிய வெங்காயத்தையும் தக்காளி, பூண்டை ஒன்றாக சேர்த்து(அதிகமான வெங்காயம் சேர்ப்பது சமையலின் ருசியை மேலும் கூட்டும்) பொன்னிறமாக வதக்கவும்.

வதக்கிய கலவையில் அரைத்து வைத்திருக்கும் மிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாடை போகும் வரை கிளரவும். பிறகு பொரித்து வைத்திருக்கும் நெத்திலியை இதில் சேர்த்துக் கொள்ளவும்.

தேவையான அளவு உப்பு, கரைத்து வைத்திருக்கும் புளியையும் சேர்த்துக் மீண்டும் கிளரவும். கிட்டதட்ட 15 நிமிடத்திலேயே இந்த நெத்திலி சம்பாலை தயார் செய்து விடலாம்.

இனி தேங்காய்ப்பால் சாதத்தில் நெத்திலி சம்பாலையும், அவித்த முட்டை, வறுத்த கடலை மற்றும் வெள்ளரியை சேர்த்து சாப்பிடலாம்.

பின் குறிப்பு :- இது மலாய்க்காரர்களில் பிரதான உணவாக இருப்பினும் நம்முடைய விருப்பத்திற்கேற்ப சமைக்கலாம்.

2 பேர் ருசித்துப் பார்த்திருக்காங்க:

மு.வேலன்

படிக்க நன்றாகதான் இருக்கிறது. சமைத்து பரிமாறினால் இன்னும் சிறப்பாக இருக்கும். :)

.:: மை ஃபிரண்ட் ::.

நல்ல ஒரு முயற்சி.

இப்படிப்பட்ட வலைப்பதிவுகள் எங்களுக்கெல்லாம் உதவியாக இருக்கும். பல வகையாக நாங்களும் சமைக்க ஐடியாக்கள் கொடுக்கும்..

அடிக்கடி அப்டேட் பண்ணுங்க.. புது சமையலை நாங்களும் முயற்சிக்கிறோம். :-)

நளபாகம்   © 2008-2009. Template Recipes by Emporium Digital

TOP